சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கம்

2 months ago 12

சென்னை,

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், மேலும் சில விமானங்களிலும் சென்று இருக்கின்றனர்.

தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவ. 1) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அதிகாலை சென்னைக்கு வர திட்டமிட்டு தங்கள் பகுதிகளிலிருந்து ரெயில்களிலும், சிறப்பு பஸ்களிலும் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் இயக்கப்படும் என்பதால், அங்கிருந்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக திங்கள்கிழமை (நவ. 4) அதிகாலை முதல் புறநகர் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரெயில் நிலையம் வரை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகாமையிலுள்ள பொத்தேரி ரெயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை (நவ. 4) அதிகாலை 4 மணிக்கு முதல் ரெயில் புறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்து ரெயில்கள் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article