நெல்லை: முறை தவறி காதல் திருமணம் செய்த சென்னை தம்பதி, பாளையங்கோட்டையிலுள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பவித்ரா (24). இவரது தூரத்து உறவினர் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த விஜயன் (25). இவர்கள் இருவரும் உறவினர்கள் வீட்டு திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள் தங்களின் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். படிப்படியாக இருவரும் காதலிக்கத் துவங்கினர். இதனையறிந்த இரு வீட்டினரும் அவர்களை கண்டித்தனர். இளம்பெண்ணின் வீட்டில் அவரது பெற்றோர், விஜயன் உனக்கு அண்ணன் முறை உறவு வேண்டும், இதனால் நீங்கள் இருவரும் காதலிக்க கூடாது என்றனர். இதனை இருவரும் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் அவர்களின் பெற்றோர் வரன் பார்க்கும் படலத்தை துவக்கினர். இதனால் யாருக்கும் தெரியாமல் காதல் ஜோடி கடந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் திருமணம் செய்து கொண்டு விஜயனின் நண்பர் வீட்டில் தங்கி இருந்தனர். பின்னர் அங்கிருந்து பாளையங்கோட்டை கோட்டூருக்கு வந்து கடந்த 4 நாட்களுக்கு முன் வாடகைக்கு வீடு பார்த்தனர். வீட்டின் உரிமையாளரிடம் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று கூறியுள்ளனர். விஜயன் 3 நாட்களாக பாளையில் கூலி வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களது திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே என மன வேதனையில் இருந்த தம்பதியர், நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
The post சென்னை காதல் ஜோடி நெல்லையில் தற்கொலை: திருமணமான ஒரே வாரத்தில் சோகம் appeared first on Dinakaran.