சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

3 months ago 17

சென்னை: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், நேற்றிரவு கனமழை கொட்டியது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாது கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன. மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும். ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article