சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

1 month ago 8

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் லட்சகணக்கானோர் தினமும் பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 4 வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் வேளச்சேரியில் இருந்து இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதனால் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் மூலம் செல்வோர் சிந்தாதிரிப்பேட்டையில் இறங்கி பஸ், ஆட்டோவில் செல்ல வேண்டி நிலை ஏற்பட்டது. அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளிலிருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டுமென்றால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து, ஆட்டோ ஏதேனும் ஒன்றை பிடித்துத்தான் செல்ல வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர். இதனால் மின்சார ரயிலை நம்பி இருந்த ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டதால் 25 நிமிட இடைவேளியில் தான் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதனால் ரயிலை தவறவிட்டால் 25 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்பதால் பலரும் இதற்காக ஆட்டோக்களில் ஏறும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் ஒரு சில நூறுகள் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது, 7 மாதங்களில் பணிமுடிந்து ஏப்ரல் 1ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டது. பிறகு பணியில் தொய்வு காரணமாக அக்டோபர் 1ம் தேதிக்குள் பணிநிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணிநிறைவடையவில்லை. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் வேளச்சேரி-கடற்கரை இடையே மீண்டும் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் – கடற்கரை இடையேயான 110 மீட்டர் கடற்படைக்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினை தீர்வை நெருங்கி வருகிறது. மேலும், புதிய ரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவை எட்டி வருகிறது. 98 சதவீதப் பணி முடிவடைந்துவிட்டது. எஞ்சியுள்ள 2 சதவீத பணிகள் தீபாவளிக்குள் முடிந்துவிடும். எனவே நவம்பர் முதல் வாரத்தில் வேளச்சேரி- சென்னை இடையிலான பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article