சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் முற்றுப்புள்ளி: 3 இந்திய வீரர்களும் தோல்வி; பிரிட்டன், பிரான்ஸ் வீரர்கள் வெற்றி

2 hours ago 1

சென்னை: ஏடிபி சேலஞ்சர் டூர் ஆண்கள் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று இந்திய வீரர் ராம்குமார் ராமநாதனை பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் எளிதில் வென்றார். ஏடிபி சேலஞ்சர் டூர் ஆண்கள் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்றும் முதல் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்தன. முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்விட் (23 வயது, 273வது ரேங்க்), இந்திய வீரர் கரண் சிங் (21வயது, 500வது ரேங்க்) மோதினர். ஒரு மணி 13 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் ஜாக்விட் 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு இந்திய வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் (30 வயது, 111வது ரேங்க்), கிரேட் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் (26 வயது, 266வது ரேங்க்) முதல் சுற்றில் நேற்று விளையாடினர். ராம்குமார் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ஜே கிளார்க் எளிதில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 15 நிமிடம் நடந்தது. நேற்றைய போட்டியில் பங்கேற்ற 3வது இந்திய வீரரான முகுந்த் சசிகுமார் (28 வயது, 394வது ரேங்க்), ரஷ்ய வீரர் அலெக்சி ஜாக்ரோவ் (24வயது, 333வது ரேங்க்) நேருக்கு நேர் சந்தித்தனர்.

முதல் செட்டை அலெக்சி 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட்டை முகுந்த் 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். பின்னர், வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3வது செட்டில் ஆரம்பம் முதலே அலெக்சி ஆதிக்கம் செலுத்தினார். அதனால் அந்த செட்டை 6-1 என்ற கணக்கில் அவர் வசப்படுத்தினார். இதையடுத்து, அலெக்சி 2-1 என்ற செட்களில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இதனால் இந்தியா சார்பில் ஆடிய 3 வீரர்களும் முதல் சுற்றிலேயே வெளியேறினர். இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய இணை ராம்குமார் ராமநாதன்/சாகேத் மைனேனி இன்று நடக்கும் போட்டியில் களம் காண உள்ளது.

The post சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் முற்றுப்புள்ளி: 3 இந்திய வீரர்களும் தோல்வி; பிரிட்டன், பிரான்ஸ் வீரர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article