தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளைச் சந்தித்து தென்னை சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கான செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலோடு விழிப்புணர்வு வாகனம் மூலமாக உழவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி கிராமத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ ஒருங்கிணைந்த மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. 75க்கும் அதிகமான முன்னோடி தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்த செயல் விளக்கம் தரப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள மூலனூர், ஆவளப்பம்பட்டி மற்றும் கொண்டைக்கவுண்டம்பாளையம் ஆகிய கிராமங்களிலும் தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்த ஒருங்கிணைந்த மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டன.
சுமார் 55 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் மேலாண்மை முறைகளை எவ்வாறு கையாள்வது என்ற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆனைமலை வட்டாரத்தில் உள்ள அங்களாகுறிச்சி கிராமத்தில் தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. கோயம்புத்தூர் பயிர் பாதுகாப்பு இயக்ககம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை ஆகியவை சார்பில் நடந்த இப்பயிற்சியில் 40க்கும் அதிகமான முன்னோடி தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பயிற்சியில் பூச்சி மேலாண்மை முறைகளை எவ்வாறு கையாள்வது என்ற செயல்முறை விளக்கம் செய்துகாண்பிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் 4.67 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கு அதிகமான பரப்பளவில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிக அளவில் ஏற்பட்டு, மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தென்னை பயிரிடப்படும் மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தப் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல விதமான ஆராய்ச்சிகள் செய்து வருகிறது. இதன் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளையும் உழவர்களுக்கு வழங்கி வருகிறது.
*தென்னங்கீற்றுகளில் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடிக்கலாம். மஞ்சள் நிற பாலித்தின் தாள்களில் இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு 20 என்ற அளவில் தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் தொங்க விட்டோ அல்லது தண்டுப்பகுதியில் சுற்றியோ வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
*என்கார்சியா ஒட்டுண்ணி தோப்புக்கு 100 என்ற அளவில் விடுவதால் வெள்ளை ஈக்களை படிப்படியாக குறைக்கலாம். அப்பர்ட்டோகிரைசா இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 என்ற விகிதத்தில் கீற்றுகளில் இணைத்து வெள்ளை ஈக்களின் தாக்குதலைக் குறைக்கலாம். மேலும் ஒட்டுண்ணிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு தென்னை மரங்களுக்கு இடையே வாழை, கல் வாழை, சீதா ஆகிய பயிர்களை ஊடுபயிராக நடலாம்.
* 5 சதவீதம் வேப்பெண்ணெயை ஒட்டு திரவம் கலந்து கீற்றுகளின் அடியில் நன்கு நனையும்படி தெளிக்கலாம். வெள்ளை ஈக்களின் சேதத்தால் ஏற்படும் கரும்பூசனத்தை நீக்க 25 கிராம் மைதா மாவு பசையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட உரங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தென்னையில் இயற்கையிலேயே உருவாகி செயல்பட்டு வரும் இயற்கை எதிரிகளாகிய என்கார்சியா ஒட்டுண்ணி மற்றும் அப்பர்ட்டோகிரைசா இரை விழுங்கி ஆகியவற்றைக் காக்கும் பொருட்டு பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை தமிழகம் எங்கும் உள்ள தென்னை பயிரிடும் உழவர்கள் பின்பற்றி ரூகோஸ் வெள்ளை ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
The post வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்! appeared first on Dinakaran.