கன்னியாக்குமரி மாவட்டத்தில் சுமார் 6,500 ஹெக்டேர் பரப்பளவில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. கன்னிப்பூ சாகுபடி ஜூன் மாதமும், கும்பப்பூ சாகுபடி அக்டோபர் மாதமும் நடைபெறும். தற்போது கும்பப்பூ சாகுபடி முடிந்துள்ள நிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக மே மாதத்தில் நாற்றங்கால் தயாரிப்புக்கான முன்முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நாற்றங்கால் அமைத்த பின்னர் ஜூன் மாதம் நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்யத் தொடங்குவார்கள். இதற்கு இடைப்பட்ட நாட்களில் நிலத்தைத் தரிசாக போடாமல் பயனுள்ளதாக மாற்றும் வகையில் விவசாயிகள் சில பணிகளைச் செய்வார்கள்.கும்பப்பூ அறுவடை முடிந்தவுடன் தழைச்சத்துக்கு சணப்பு, தக்கைப்பூண்டு உள்ளிட்ட தாவரப் பயிர்களைச் சாகுபடி செய்து, அவை பூக்கும் தருவாயில் மடக்கி உழுது கன்னிப்பூ சாகுபடிக்கு நிலத்தைத் தயார் செய்வார்கள். தற்போது வேளாண்மைத்துறை மானிய விலையில் உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நிலையில் அதனையும் சாகுபடி செய்து வருகிறார்கள். அதன்படி பறக்கை பகுதியில் உளுந்து சாகுபடியில் ஈடுபட்டுள்ள முன்னோடி விவசாயி ரவீந்திரனை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.
“ நமது முன்னோர்கள் கும்பப்பூ அறுவடை முடிந்தவுடன் உளுந்து சாகுபடி செய்வார்கள். உளுந்து பயிரின் வேர் முடிச்சில் தழைச்சத்து சேர்ந்திருக்கும். அறுவடை முடிந்த உளுந்துச் செடிகளை மண்ணோடு சேர்த்து உழும்போது மண்ணிற்குத் தேவையான தழைச்சத்து கிடைக்கும். ஆனால் நாளடைவில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சம்பளம் உயர்வு காரணமாக உளுந்து சாகுபடியை புறம்தள்ளிவிட்டு தழைச்சத்துக்குத் தேவையான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி உள்ளிட்ட பசுந்தாள் விதைகளை சாகுபடி செய்து வருகிறார்கள். அதேசமயம் உளுந்தைப் பயிரிட்டால் உளுந்து மூலம் நமக்கு ஒரு வருமானம் கிடைக்கும். செடிகள் மண்ணுக்கு உரமாகும். உளுந்தை விதைத்து சுமார் 65 நாட்களில் இந்த இரட்டை நன்மைகளை நாம் அடையலாம்.
பொதுவாக உளுந்து நெற்றுகளை நாம் பறிக்கத் தேவையில்லை. செடிகளுடன் அறுத்து எடுத்துவிடலாம். பின்னர் உளுந்தைத் தனியாக பிரித்து எடுத்துவிட்டு செடிகளை வயல்களில் உரமாக்கிவிடலாம். இதனால் யூரியா வாங்கும் செலவு குறையும். பறக்கை பகுதியில் நாங்கள் கும்பப்பூ சாகுபடி பணி முடிந்தவுடன் நிலத்தை தரிசாக போட்டுவிடுவோம். பின்னர் நிலத்தில் தொழுஉரங்கள் போட்டு சாகுபடிக்கு தயாராவோம். தற்போது வேளாண்மைத்துறை அதிகாரிகள் எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உளுந்து சாகுபடி செய்ய வலியுறுத்தினர். அதன்படி நாங்கள் உளுந்து சாகுபடி செய்துள்ளோம்.பறக்கை பகுதியில் 1500 ஏக்கர் பரப்பளவில் வயல்கள் உள்ளன. இந்த வயல்கள் 1, 2, 3 ஆகிய மூன்று குளங்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. 1 மற்றும் 2 குளங்கள் மூலம் பாசன வசதி பெறும் வயல்களில் கடந்த 60 வருடத்திற்குப் பிறகு தற்போது உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.
இதுபோல் 3வது குளம் மூலம் பாசன வசதி பெறும் வயல்களில் 15 வருடத்திற்கு பிறகு இந்த வருடம் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். பறக்கை பகுதியில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 15ம் தேதிக்குள் கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகிவிடுவார்கள். இந்த வருடம் பறக்கை குளங்களில் உள்ள மதகுகள் பழுது பார்க்க வேண்டிய வேலை உள்ளதால் கன்னிப்பூ சாகுபடிக்கு சிறிது நாட்கள் கால தாமதம் ஏற்படும். இதனை பயன்படுத்தியும் வேளாண்மை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலும் வம்பன் 6 ரக உளுந்து சாகுபடி செய்துள்ளோம்.கடந்த காலங்களில் எனக்குச் சொந்தமான 6 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யும்போது சுமார் 1000 கிலோ வரை உளுந்து கிடைத்தது. தற்போது சாகுபடி செய்துள்ள வம்பன் 6 ரகம் மூலம் ஏக்கருக்கு 300 முதல் 400 கிலோ வரை உளுந்து கிடைக்கும் என வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். வேளாண்மை அதிகாரிகள் கூறும் அளவிற்கு உளுந்து கிடைக்காமல் பாதி அளவு கிடைத்தால் கூட அனைத்து செலவுகளும் போக ரூ.10 ஆயிரம் லாபம் கிடைக்கும். எப்படி பார்த்தாலும் உளுந்து மூலம் இரட்டிப்பு லாபம் கண்டிப்பாக கிடைக்கும்’’ என அடித்துக் கூறுகிறார்.
தொடர்புக்கு
ரவீந்திரன்: 99440 46446.
உதவி பேராசிரியர் கவிதா:
90034 18457.
டிஏபி கரைசல் பயன்படுத்தலாம்
உளுந்து சாகுபடி செய்து 65 நாட்களில் அறுவடை செய்யலாம். பூக்கும் பருவத்தில் பூக்கள் அனைத்து காயாகவும் நல்ல தரமாக கிடைப்பதற்கு டிஏபி கரைசல் பயன்படுத்தலாம். இந்த கரைசலை பயன்படுத்தும்போது அதிக எடையுடன் உளுந்து கிடைக்கும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 சதவீதம் டிஏபி கரைசலை பயன்படுத்தவேண்டும். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டிஏபி பயன்படுத்த வேண்டும். 4 கிலோ டிஏபியை 10 லிட்டர் தண்ணீல் முந்தைய நாள் இரவு ஊற வைத்து கலக்கவேண்டும். இதில் கரையும் சத்துக்கள் கரைந்து மேலாக நிற்கும். காலையில் மேலாக நிற்கும் தெளிந்த உரக்கரைசலில் ஒரு ஸ்பிரேயர் டேங்குக்கு ஒரு கப் என்ற அளவில் தண்ணீரில் கலந்து செடிமேல் இலையில் நன்கு படும்படி காலை அல்லது மாலையில் தெளிக்கலாம். டிஏபி உரக்கரைசலில் அடியில் தங்கியிருக்கும் மண்டியான கரைசலை செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.
நோய் தாக்குதல் இருக்காது
உளுந்து சாகுபடியின் பயன்கள் குறித்து திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் கவிதா கூறுகையில், “ தமிழக அரசின் ஆலோசனைப்படி வம்பன் 6, 8, 10 ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வம்பன் ரகம் சாகுபடி செய்யும்போது மஞ்சள் நோய் தாக்குதல் இருக்காது. ஒரு ஏக்கரில் 300 கிலோ முதல் 400 கிலோ வரை உளுந்து கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு உளுந்து மூலம் வருவாய் கிடைக்கும். உளுந்துப்பயிரின் வேர் முடிச்சில் ரைசோபியம் சேமித்து வைக்கப்படுகிறது. இதன்மூலம் வயலுக்கு வேண்டிய தழைச்சத்து கிடைக்கிறது. இதன் காரணமாக நெல் சாகுபடிக்கு யூரியா குறைவாக பயன்படுத்தினால் போதுமானது’’ என்கிறார்.
The post உளுந்து சாகுபடியால் இரட்டிப்பு நன்மை! appeared first on Dinakaran.