சென்னை: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகையை திருட முயன்ற காவலர் கைது

4 hours ago 1

சென்னை,

சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். ரெயில் இன்று காலை அம்பத்தூரை கடந்து வந்த போது பெண் உறங்கிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட வாலிபர் ஒருவர் நைசாக சென்று பெண்ணின் கைப்பையை திருட முயற்சி செய்துள்ளார். இதனை உணர்ந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் அருகில் உள்ள பொது மக்கள் அவரை பிடிக்க முயன்ற போது ஜன்னல் வழியாக பையை தூக்கி வீசினார்.

இது குறித்து தகவலறிந்த சென்ட்ரல் ரெயில்வே போலீசார் உடனடியாக பையை கண்டுபிடித்தனர். அதில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குற்றம் உறுதிசெய்யப்பட்டது. வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கைது செய்யப்பட்ட அந்த நபர் அப்பகுதியை சேர்ந்த காவலர் வசந்த குமார் என தெரியவந்துள்ளது. ஓடும் ரெயிலில் காவலர் ஒருவர் பெண்ணிடம் நகையை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏற்கனவே வசந்த குமார் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article