![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/30/36581897-state-01.webp)
சென்னை,
தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 11.63 கோடி ரூபாய் மற்றும் இரத்த மையத்தினை மேம்படுத்துவதற்கு 1.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் 1880-ம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்.எஸ்.ஆர்.எம்.) மருத்துவமனை வறுமை நிலையிலுள்ள தாய்மார்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது. வடசென்னையிலுள்ள பெரும்பாலான மக்களும் மேலும் அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் போன்ற பகுதிகளிலுள்ள மக்களும் சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் இந்த மருத்துவமனையின் சேவைகளால் பயனடைகின்றனர்.
குடும்ப நல மருத்துவ சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாடு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நடைமுறைகள் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகளை இம்மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் குறைந்த மகப்பேறு இறப்பு விகிதம், குறைந்த பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் கொண்ட முன்னணி மருத்துவமனையாக இம்மருத்துவமனை உள்ளது.
இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 12,000 மகப்பேறுகள் நடைபெறுவதன் மூலம் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட வட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது.
இம்மருத்துவமனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் செயல்திறனை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் கட்டட சீரமைப்பு, மின்சார கருவிகள் மற்றும் மின்தூக்கி பணிகளுக்காக 11.63 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த மருத்துவமனையின் தரம் மேம்படுகிறது.
610 படுக்கைகளிலிருந்து 810 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு இந்த நிதியானது மேலும் வலு சேர்க்கும். அரசின் இந்த முயற்சியானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் எளிதில் மருத்துவ சேவையை பெறுவதில், அரசின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுவதுடன் இப்பகுதி மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்குவதையும் உறுதி செய்கிறது.
மேலும், இம்மருத்துவமனையில் உள்ள ரத்த மையத்தை முழு அளவிலான இரத்தக் கூறுகள் பிரிப்பு பிரிவு மையமாக மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு 1,74,20,197/- ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு தேவைப்படும் இரத்த சேவை உடனுக்குடன் வழங்குவதற்கு பேருதவியாக இருக்கும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.