![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39045700-kgncp.webp)
கோட்டயம்,
கேரளாவில் கோட்டயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களிடம் மூத்த மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் 3 மாணவர்கள் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரில், கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய ராகிங் கொடுமை 3 மாதங்களாக நீடித்து வந்துள்ளது என தெரிவித்து உள்ளனர். கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் ராகிங்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன்படி, மாணவர்களை நிர்வாண கோலத்தில் நிற்க வைத்து பின்னர், பளு தூக்கும் உபகரணங்களை கொண்டு பல்வேறு கொடூர செயல்களில் ஈடுபட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர் என குற்றச்சாட்டாக கூறப்பட்டு உள்ளது.
காம்பஸ் எனப்படும் கணித படிப்புக்கு உபயோகப்படும் உபகரணம் மற்றும் அதுபோன்ற பிற பொருட்களை கொண்டு கடுமையாக தாக்கி, மாணவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். இதன்பின்னர், அந்த காயங்களுக்கு மருந்து தடவி விட்டுள்ளனர். அப்போது, வலியால் மாணவர்கள் அலறும்போது, வாயில் கிரீம் தடவி விட்டுள்ளனர்.
இதுதவிர, முகம், தலை மற்றும் வாய் பகுதிகளில் கிரீம் தடவி, இளநிலை மாணவர்களை கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த செயல்களை எல்லாம் வீடியோவாக படம் பிடித்து வைத்து கொண்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனை வெளியே கூறினால், படிக்க விடாமல் செய்து விடுவோம் என அச்சுறுத்தியும் உள்ளனர்.
மூத்த மாணவர்கள் ஞாயிற்று கிழமையானால், மதுபானம் குடிக்க பணம் கொடுக்கும்படி இளநிலை மாணவர்களை மிரட்டி, பணம் பறித்து வந்துள்ளனர். பணம் கொடுக்க இயலாத மாணவர்களை அடித்து, துன்புறுத்தியும் வந்துள்ளனர். இதில் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களில் ஒரு மாணவர், அவருடைய தந்தையிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
அவர், விசயங்களை புரிந்து கொண்டு போலீசுக்கு செல்லும்படி மகனிடம் கூறியுள்ளார். நீண்டகாலம் நடந்த இந்த கொடுமையை பொறுக்க முடியாமல், 3 மாணவர்கள் போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து 3-ம் ஆண்டு மாணவர்கள் 5 பேரை ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.