சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

3 weeks ago 4

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையொட்டி, வாழ்த்தியமைக்காக முதல்வருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துக் கொண்டார். சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு மாநில கட்சியாக பரிணாமம் பெற்றுள்ளது. இது எங்களின் நீண்ட கால கனவு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு உற்ற துணையாக இருப்போம் என்று முதல்வருடன் கூறி இருக்கிறோம். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது அவர்களது பலவீனத்தை காட்டுவதாகதான் அமையும். வெற்றியோ, தோல்வியோ அதை எதிர்கொள்வதுதான் அதிமுகவின் சிறப்பு. ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தார்கள். இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணித்துள்ளனர்.

இது மறைமுகமாக பா.ஜ.வின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பதாக அமையும். அதிமுகவை பின்னுக்கு தள்ளி தாங்களே 2வது பெரிய கட்சி என்று காட்டி கொள்வதற்கான முயற்சிகளையும் பாஜ செய்கிறது. எனவே அதிமுகவின் இந்த நிலைப்பாடு அங்கு (ஈரோடு கிழக்கு) பாஜவின் ஆதரவோடு நிறுத்தப்படும் வேட்பாளருக்கு சாதகமாக அமையும். எனவே இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பயன் தராது. அதிமுக மீது மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கை, நன்மதிப்பு பார்வை கடுமையாக பாதிக்கப்படும். அதிமுக சரிவுக்கான புள்ளியாக அமையும். எனவே இந்த முடிவை அவர்கள் எடுத்தது அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சந்திப்பின் போது அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ரவிக்குமார், எம்எல்ஏக்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, முகமது ஷா நவாஸ், எம்.பாபு, முன்னாள் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article