
சென்னை,
நடப்பு ஐ.பி.எல். 8-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்த தோல்விக்கு சேப்பாக்கத்தின் பிட்ச்தான் காரணம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதிருப்தியை வெளிப்படுத்தினார். கடந்த சில வருடங்களாகவே அதை தங்களால் சரியாக படிக்க முடியாததால் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு சொந்த மண் சாதகம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நன்றாக விளையாடாமல் பிட்ச் மீது தோல்விக்கான பழியைப் போடுவது ஆச்சரியமளிப்பதாக இந்திய வீரர் புஜாரா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சென்னை அணியில் நீங்கள் பிட்ச் பற்றி புகார் செய்ய முடியாது. பிட்ச்சில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று பிளெமிங் சொன்னால் அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகள் தாங்கள் விரும்பும் பிட்ச்களை பெறுவார்கள். மற்ற அணிகள் விரும்பிய பிட்ச்களை பெறுவதற்கான செல்வாக்கை கொண்டிருக்க மாட்டார்கள்.
ரச்சின் ரவிந்திர, ருதுராஜ் கெய்க்வாட் தவிர பேட்டிங் வரிசையில் நிறைய குறைகள் உள்ளன. ஏனெனில் அவர்களின் மிடில் ஆர்டர் வலுவாக இல்லை அவர்கள் விரைவாக ரன்கள் எடுக்கத் தொடங்க வேண்டும். அவர்கள் தங்கள் மிடில் ஆர்டரை பெரிதும் நம்பியிருக்கிறார்கள். அவர்களின் மிடில் ஆர்டர் முன்னேற வேண்டிய நேரம் இது. அவர்கள் அதற்கு முழுமையாகத் தயாராக இருப்பது போல் தெரியவில்லை. அவர்கள் மீண்டும் பார்முக்கு வந்தால் மட்டுமே சென்னை அணியால் சிறப்பாக செயல்பட முடியும்" என்று கூறினார்.