
சென்னை மந்தைவெளி, திருவேங்கடம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மாளவிகா (38 வயது). இவர், அபிராமபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். மாளவிகாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர்.
ஆனால், திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அவருடைய பெற்றோர் மாளவிகாவுக்கு தொடர்ந்து வரன் தேடி வந்தனர். இதனால் அவர் சோகத்துடன் காணப்பட்டார்.
நேற்று காலை மாளவிகா வழக்கம்போல் நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். திடீரென அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 9-வது மாடிக்கு சென்ற மாளவிகா, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் மாளவிகாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாளவிகா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை மாளவிகா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.