செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்

1 week ago 5

பாடாலூர்: செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் கடந்த 8- ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

கடந்த 9-ம் தேதி முருகன், வள்ளி-தெய்வாணை திருக்கல்யாண உற்சவமும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று சிவன் கோயிலில் இருந்து குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் அலங்கார பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக காலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் தங்களது வயல்களில் விளைந்த விளை பொருட்களையும், ஆடு, மாடு, கோழிகளையும் காணிக்கையாக செலுத்தினர். இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு முருகன், வள்ளி-தெய்வானைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மதியம் 12 மணிக்கு சுவாமிகளுக்கு பட்டுசாத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மதியம் 2.15 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு நாதஸ்வர இசை முழங்க, வாணவேடிக்கையுடன் தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், எம்எல்ஏ எம்.பிரபாகரன் ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் ‘அரோகரா’ பக்தி கோஷம் முழங்க தேர் கம்பீரமாக அசைந்தாடி வந்து மலையேறும் சிமெண்ட் சாலை அருகே வந்து நின்றது.

தேரோட்டத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட், இரூர், பாடாலூர், நாரணமங்கலம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், மாவிலிங்கை உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வல்லபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தினை முன்னிட்டு செட்டிகுளத்திற்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி. ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி பாதுகாப்பு பணியில் பாடாலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் மாவட்ட போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர், மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். நாளை (சனிக்கிழமை ) மாலை மீண்டும் தேரோட்டம் நடைபெறும். பட விளக்கம்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் வள்ளி,தெய்வானையுடன் தண்டாயுதபாணி.

 

The post செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article