சேலம்: பொதுச்செயலாளர் நானிருக்க, செங்கோட்டையனுடன் பாஜ தலைவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது என மாஜி மந்திரி தங்கமணியிடம், எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இருவரும் சேலம் வீட்டில் 2 மணி நேரம் ஆலோசனை செய்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜ கூட்டணியில் அதிமுகவை இணைத்தே ஆக வேண்டும் என்பதில், பாஜ டெல்லி தலைவர்கள் விடாப்பிடியாக இருந்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, டெல்லிக்கு வரவழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதன்மூலம் கூட்டணி உறுதியான நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்த்தே ஆகவேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி உறுதியாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ளது தெரிந்தும், சொல் பேச்சை கேட்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், செங்கோட்டையனை பாஜ கையில் எடுத்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளரை சந்தித்து பேசவேண்டிய பாஜ தலைமை, செங்கோட்டையனை அழைத்து பேச வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியோடு, எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இந்நிலையில், செங்கோட்டையனை 2வது முறையாக டெல்லிக்கு வருமாறு, பாஜ மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. தங்களது பேச்சை கேட்காத எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதில் பாஜ உறுதியாக இருக்கிறது. சின்னத்தை முடக்குவதுடன், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை காரணமாக காட்டி, செங்கோட்டையனை பொதுச் செயலாளராக ஆக்கிவிட திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி, மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறக்க வந்த அவரது முகத்தில் எந்த புன்னகையும் இல்லை. நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த அவரை நிருபர்கள் மடக்கினர். வழக்கமாக பேட்டி கொடுக்கும் அவர், ேநற்று எதுவும் பேசாமல் கையை நீட்டி விட்டு, வேகமாக காரில் ஏறி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது மாஜி அமைச்சர்களான காமராஜ், நாமக்கல் சரோஜா ஆகியோர் எடப்பாடியை சந்தித்து விட்டு சென்றனர். மாலை 3 மணி அளவில், இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கட்சியினரால் கூறப்படும் மாஜி அமைச்சர் தங்கமணி, எடப்பாடி வீட்டிற்கு வந்து, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசினர். பொதுச்செயலாளரான என்னை விட்டு விட்டு, செங்கோட்டையனுடன் பாஜ பேசுவதற்கு என்ன இருக்கிறது.
கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்களா, எதற்காக செங்கோட்டையன் டெல்லி செல்லவேண்டும் என கேட்டு நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் ஒரே காரில் புறப்பட்டு, காமலாபுரம் சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் செங்கோட்டையன் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ேமாடியை சந்திக்க ஓபிஎஸ் மனு
பிரதமர் மோடி வருகிற 6ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அங்கு புதிய ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார். இதற்காக 5ம் தேதி இரவு மதுரை வருகிறார். அவரை சந்தித்துப் பேச அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு நேரம் இதுவரை ஒதுக்கி தரப்படவில்லை. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது மோடியை சந்திக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை எடப்பாடி சந்திப்பு உறுதியாகவில்லை என்று கூறப்படுகின்றன. இதனால் மோடி வருகை, அதிமுகவில் பூகம்பத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post செங்கோட்டையனை அழைத்து அமித்ஷா பேச்சு எதிரொலி; தங்கமணியுடன் எடப்பாடி அவசர ஆலோசனை: கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு appeared first on Dinakaran.