கள்ளக்குறிச்சி, ஜன.30: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி விஷ சாராயம் குடித்த 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 68 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனை சிகிச்சையில் குணடமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினர். இந்த வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் அரிமுத்து, கண்ணன், அய்யாசாமி ஆகியோர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, தாமோதரன், சின்னதுரை, ஜோசப்ராஜா, மாதேஷ், கவுதம்சாந்த், சிவக்குமார், கதிரவன், சக்திவேல், சடையன், ஏழுமலை, ரவி, பன்சிலால், சாகுல்ஹமீது, செந்தில், தெய்வீகன், செந்தில், வேலு, பரமசிவம், முருகேசன் ஆகிய 21 பேர் கடலூர் மத்திய சிறையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தற்போது கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணை ஆவணங்களை கடந்த மாதம் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கடந்த 22ம் தேதி சிபிஐ அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால் வழக்கை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சிபிஐ அதிகாரிகள் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இதனால் விரைவில் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
The post செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சிபிஐ மனு appeared first on Dinakaran.