காஞ்சிபுரம்: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வட்ட பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் எஸ்.தமிழ்ச்செல்வன் கோரிக்கை வைத்துள்ளார். தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் எஸ்.தமிழ்ச்செல்வன், ரயில்வே மத்திய இணை அமைச்சர் சோமண்ணா மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரிசர்வ்ரேஷன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. கடந்த, கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு காலை 8 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்குகிறது.
இதை மீண்டும் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் நலன் கருதி ரிசர்வ்ரேஷன் கவுண்டர் இயக்க வேண்டும்.
தென்னக ரயில்வே நிர்வாகம், அரக்கோணம் சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை அரக்கோணம் வரை (வழி) திருமால்பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக காலை மற்றும் மாலை இயங்கும் பயணிகள் விரைவு ரயிலை மெமோ பாசஞ்சர் ரயிலாக பொதுமக்கள் நலன் கருதி இயக்க வேண்டும். சென்னை கடற்கரை சென்னை சென்ட்ரல் வழி தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர் மார்க்கமாக வட்ட வடிவப் பாதையில் ரயிலை இயங்கி வந்ததை நிறுத்தியதை மீண்டும் இயக்க வேண்டும். இந்த, ரயில் மதிய நேரங்களில் இயக்கினால் செங்கல்பட்டு, தாம்பரம், அரக்கோணம், திருவள்ளுர் செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ள்தாக அமையும். சென்னை கோட்டம், செங்கல்பட்டு அரக்கோணம் 75 கிமீ வரை (வழி வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருமால்பூர்) சுமார் 75 கிமீ தூரத்திற்கு கூடுதல் புதிய ரயில்பாதை அமைத்து தரக் கோருதல் அல்லது அரசு நிதிநிலை பொறுத்து செங்கல்பட்டு காஞ்சிபுரம் வரை சுமார் 40 கிமீ தூரம் புதிய கூடுதல் ரயில்பாதை அமைத்து தர வேண்டும். தென்னக ரயில்வே, சென்னை கோட்டத்தில் உள்ள திண்டிவனம் நகரி (வழி) தெள்ளார், வந்தவாசி, செய்யாறு, கலவை, ஆற்காடு, ராணிப்பேட்டை, நாகலாபுரம் நகரி வரை சுமார் 120 கிமீ தூரம் புதிய ரயில்பாதை அமைத்து தர கடந்த 30 வருடமாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். 10 ஆண்டுகளில் ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மத்திய, மாநில அரசு சுமார் 1000 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்து, அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. எனவே, ரயில் பாதை அமைக்கும் பணியை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வட்ட பாதையில் ரயில்கள் இயக்க கோரிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து appeared first on Dinakaran.