*கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி : சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ₹4.02 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். சூளகிரி ஊராட்சி ஒன்றியம் குருபாரத்தப்பள்ளி, கோனேரிப்பள்ளி, அத்திமுகம், பேரிகை, புக்கசாகரம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ₹4 கோடியே 1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, கோனேரிப்பள்ளி ஊராட்சியில் குருபராத்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.11 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களின் வாசிப்பு திறன், கணித வாய்ப்பாடு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, வீட்டிற்கு சென்று சிறிது நேரம் விளையாட்டில் ஈடுபட்ட பின், அன்றைய பாடத்திட்டங்களை தினசரி படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் லட்சுமி என்பவரின் வீட்டு கட்டுமான பணிகளை பார்வையிட்டு, சரியான முறையில் நிதி மற்றும் தளவாட பொருட்கள் வழங்கப்படுகிதா என்பது குறித்து கேட்டறிந்த அவர், பணிகளை நேரடியாக கண்காணித்து தரமாக முடிக்க வேண்டும் என்றார்.
பின்னர் புக்கசாகரம் கிராமத்தில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ.2.47 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடம் மறு சீரமைப்பு பணிகள், குழந்தைகளுக்கு வழங்க சமைக்கப்பட்ட உணவுகள், குழந்தைகளின் எடை, உயரம், வருகைப் பதிவேடு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, குழந்தைகளிடம் தினசரி கற்பிக்கும் பாடல்களை பாடச்சொல்லி கேட்டறிந்தார்.
இதே போல் அத்திமுகம் ஊராட்சி முகலப்பள்ளி ஆதிதிராவிடர் காலனியில் வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.54 ஆயிரம் வீதம் 14 வீடுகள் ரூ.7.02 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு செய்யும் பணிகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் சீரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், பேரிகை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.95 லட்சம் மதிப்பில் மழைநீர் சேகரிக்க புதிய குட்டை அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.44.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணி, குடிநீர் தொட்டியில் இருந்து குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு, பயன்பெறும் பொதுமக்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.78 கோடி மதிப்பில் 2.36 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் வெளிவட்ட சாலை பணிகளை பார்வையிட்டு, ஜல்லி கலவை அடுக்குகள், சாலையின் அகலம் குறித்து ஆய்வு செய்தார்.
காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79.32 லட்சம் மதிப்பில் பேரிகை சாலை முதல் கர்நாடக மாநில எல்லை வரை 2 கி.மீ தூரத்திற்கு சாமை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், பி.எஸ்.திம்மசந்திரம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.68.25 லட்சம் மதிப்பில் பேரிகை சாலை முதல் சித்திலன்தொட்டி வரை 2 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தலட்சுமி, ஒன்றிய பொறியாளர்கள் கோவிந்தராஜ், சத்தியநாராயணராவ், சபாரத்தினம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, சிவசங்கரி மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
The post சூளகிரி ஒன்றியத்தில் ₹4.02 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.