சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள 'பீனிக்ஸ்'. இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதற்கு முன் வெளியான டீசரில், முதல் காட்சியே சிறுவர் சீர்த்திருத்த சிறையுடன் தொடங்கியது. கையில் விலங்குடன் குற்றவாளியாக சீர்த்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் சூர்யா காணப்பட்டார். பின்னர், ஒரு பாக்ஸிங் வீரரைப் போல சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் ரீலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.