
சென்னை,
'மார்வெல்' நிறுவனத்திற்காக 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டி.சி. நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார். 'லெக்ஸ் லூதர்' என்ற வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகி லூயிஸ் லேன் கதாபாத்திரத்தில் ரச்சேல் புரோஸ்நாகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து டி.சி. நிறுவனத்திற்கு அடுத்தடுத்த சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'சூப்பர் மேன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் வருகிற ஜூலை 11-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் மேனாக நடிக்கும் டேவிட் கோரன்ஸ்வெட்டின் தந்தை ஜோ-எல்லாக 'தி ஹேங்கொவர்' நடிகர் பிராட்லி கூப்பர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு இந்த பாத்திரத்தில் டாம் குரூஸ் நடிப்பதாக கூறப்பட்டது.