செய்யூர்: சூனாம்பேடு முதல் நிலை ஊராட்சியில் 36 கடைகளுடன் கூடிய ஈரடுக்கு வணிகவளாகம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவில் சூனாம்பேடு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 22 கிராமங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலை சார்ந்து வாழ்கின்றனர். இப்பகுதி மக்கள் அனைவரும் சூனாம்பேடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பஜார் பகுதியில் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்த பஜார் பகுதி எப்போதும் பொதுமக்கள் அதிகம் நிறைந்து காணப்படும்.
இந்த பஜார் பகுதியில் சூனாம்பேடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஊராட்சிக்குச் சொந்தமான 18 கடைகளில் மளிகை, டெய்லர், சலூன் உள்ளிட்ட ஏராளமான கடைகள் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. நாளடைவில் இந்த கடைகளின் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் கடைகள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டன.
இதனால் அங்கு வியாபாரம் செய்து வந்த ஏராளமான வணிகர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் தற்போது பெரும்பாலான கடைகள் இல்லாததால் வெளிஇடங்களுக்குச் சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் முதல் தளத்துடன் கூடிய 38 கடைகள் கொண்ட ஈரடுக்குகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சூனாம்பேடு முதல் நிலை ஊராட்சியில் ஈரடுக்கு வணிக வளாகம் கட்டித் தர கோரிக்கை appeared first on Dinakaran.