சுவரில் துளைபோட்டு கைவரிசை டாஸ்மாக் கடைக்குள்ளேயே அமர்ந்து பீர் குடித்துச் சென்ற கொள்ளையர்கள்

2 weeks ago 2

திருத்தணி, ஜன.19: திருத்தணி அரசு மதுபானக்கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே சென்று, நிதானமாக அமர்ந்து பீர் குடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, மத்தூரில் திறந்தவெளியில் உள்ள பழைய கட்டிடத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தினமும் ₹3 லட்சத்திற்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது. இக்கடையில் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின் விற்பனையாளர்கள் பணத்தை கடையில் உள்ள லாக்கரில் வைத்து கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல் கடையை திறக்க நேற்று மதியம் 12 மணியளவில் கடையின் விற்பனையாளர்கள் வந்து பார்த்தபோது, கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டும், பக்கவாட்டு சுவரில் துளையும் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருத்தணி டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கடையை சோதனை செய்தபோது, லாக்கரில் வைக்கப்பட்ட பணம் கல்லா பெட்டியில் பத்திரமாக இருந்தது. இதனையடுத்து, மதுபாட்டில்கள் ஏதேனும் திருடு போயுள்ளதா என சோதனையிட்டதில், கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடையில் வைக்கப்ட்டிருந்த 5 பீர் பாட்டில்களை திருடி குடித்துவிட்டு, காலி பாட்டில்களை கடையின் பின்புறம் வீசிச் சென்றது சோதனையில் தெரியவந்தது. மேலும், பழுதடைந்த கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், கடையின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என கூறப்படுகிறது. ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுவரில் துளைபோட்டு கைவரிசை டாஸ்மாக் கடைக்குள்ளேயே அமர்ந்து பீர் குடித்துச் சென்ற கொள்ளையர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article