
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் பஹல்காமில் நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செய்தியை சொல்வதற்காகவே இந்த கூட்டம் பஹல்காமில் நடத்தப்பட்டதாகவும், காஷ்மீர் மக்கள் உறுதியாகவும், அச்சம் இன்றியும் உள்ளனர் என்றும் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த மந்திரிசபை கூட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்தும், பஹல்காம் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் மீண்டும் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பஹல்காமில் உமர் அப்துல்லா சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "உள்ளூர் மக்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவிக்க பஹல்காமுக்கு வந்துள்ளோம். அதோடு, காஷ்மீர் மற்றும் பஹல்காமுக்கு மீண்டும் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் பஹல்காமில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் உமர் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.