சென்னை: மீன்பிடி படகுகளை இயக்க தற்போது மண்ணெண்ணை மற்றும் டீசல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, கடல் மாசுபாட்டை தடுக்கும் வகையில், படகுகளில் மண்ணெண்ணைக்கு பதில் எரிபொருளாக காஸ் சிலிண்டர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் மீன்பிடி படகுகளில் மண்ணெண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எல்பிஜி (காஸ்) சிலிண்டர்களை பயன்படுத்தி இயக்குவதற்கான முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு ரூ.1.90 கோடி நிதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மண்ணெண்ணை பயன்படுத்தி இயக்கப்படும் 150 படகுகளில் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவதற்கான ‘கிட்’கள் பொருத்தப்படும். இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சர்வதேச ஆட்டோ தொழில்நுட்பமையத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.