தஞ்சாவூர், மே 13: சரபோஜி மார்க்கெட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை யாரும் பயன்படுத்தாததால் பழுதடைந்து வெறும் காட்சிப்பொருளாய் மாறியுள்ளது. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தடை உள்ளது. ஆனால், அந்த தடை சில வாரங்கள் தான் தாக்குப்பிடித்தன. ஒன்றை தடை செய்யும் போது, அதற்கு மாற்றாக வேறொன்றை முன் வைக்காமல் வெறுமனே தடை என விமர்சனங்கள் எழுந்ததால் மீண்டும் பாலித்தீன் பைகள் சந்தைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
என்னதான் சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர சோதனை நடத்தினாலும் கேரிபேக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறையவில்லை. பறிமுதல், அபராதம் என நடவடிக்கைகள் பாய்ந்தாலும் முழுமையாக பிளாஸ்டிக்கை தடை செய்ய முடியவில்லை. வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்பட்டது.
ஆனால் இவைகள் எல்லாம் சில காலங்கள் தான். மீண்டும் நடுத் தர ஓட்டல்கள், மளிகைக்கடை, டீக்கடை, தெருவோர கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் தான் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை மீண்டும் மஞ்சப்பை என 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி திமுக அரசு அறிமுகப்படுத்தி அதை மக்களிடையே பெரிய அளவில் விளம்பரமும் செய்தது.
இந்த திட்டத்தின் கீழ் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், மார்க்கெட் பகுதிகளில் மஞ்சப்பை வழங்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டன. ஆனால், பொதுமக்களிடையே போதியளவில் விழிப்புணர்வு ஏற்படாததால், திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. அதன் ஒரு பகுதியாக தஞ்சை சரபோஜி மார்க்கெட் பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துணிப்பை வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டது.
இந்த எந்திரம் ஏ.டி.எம். போன்று தான். இந்த துணிப்பை வழங்கும் எந்திரத்தில் துணி இருப்பு எண்ணிக்கையை சரிபார்க்கவும், துணிபையை பெற்று கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.10 நாணயத்தை அந்த எந்திரத்திற்குள் போட்டால் மஞ்சப்பை நம் கைக்கு கிடைத்துவிடும். ஆனால் இந்த எந்திரம் சில நாட்கள் கூட செயல்படவில்லை. இப்போது காட்சி பொருளாக காணப்படுகிறது. அந்த எந்திரங்கள் செயல்படாததுடன் துணிப்பைகளும் இல்லாத காரணத்தினால் மக்களும் அதை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு, வேடிக்கை பார்த்தபடி கடந்து செல்கின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாம் பாதிக்கப்படுவதுடன் கால்நடைகளும் பாதிப்புக்கு ஆளாகின்றன. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை சீர் செய்து, மீண்டும் மஞ்சப்பை பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, மக்களிடையே மஞ்சப்பை பயன்படுத்தும் வழக்கத்தை முழு வீச்சில் கொண்டு செல்லும் விழிப்புணர்வு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை பயன்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை appeared first on Dinakaran.