புதுவையில் பரபரப்பு ரூ.5.10 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

4 hours ago 3

புதுச்சேரி : புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் நிறுவனத்தின் கணக்கு மேலாளராக இருப்பவர் சுகியா. இவருக்கு, கடந்த மார்ச் மாதம், அவரது நிறுவன உரிமையாளர் போல் வாட்ஸ்அப்பில் மர்ம நபர் மெசேஜ் அனுப்பி ரூ.5.10 கோடி உடனடியாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வாட்ஸ்அப் டி.பியில் அவரது உரிமையாளர் படம் இருந்ததால் உண்மை என நம்பிய சுகியா, 2 வங்கிக் கணக்குகளில் பல தவணைகளாக ரூ.5.10 கோடி அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து தனியார் நிறுவன உரிமையாளர் புதுச்சேரி சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், மோசடி மூலம் பெறப்பட்ட ரூ.5.10 கோடி பணத்தில், சுமார் ரூ.3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள ஒரு வங்கிக்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், அந்தக் கணக்கு மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத் மாவட்டம், ஜலாங்கியைச் சேர்ந்த மொஃபிகுல் ஆலம் முலா என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், அவரை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு வங்கி கணக்கில் ரூ.1.80 கோடி சென்ற நிலையில் அந்த வங்கி கணக்கு கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் என்பவரது வங்கிக் கணக்கு என தெரியவந்தது.

அதன்படி, சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா அறிவுறுத்தலின்படி, எஸ்.பி. பாஸ்கரன் வழிகாட்டுதல்களின்படி, இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையின் கீழ் மணிமொழி, பாலாஜி, வைத்தியநாதன் ஆகியோர்களை கொண்ட சைபர் கிரைம் குழு திருவனந்தபுரத்தில் சரத் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post புதுவையில் பரபரப்பு ரூ.5.10 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article