கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீரை விட்டால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு நகராட்சியில் பதிவு செய்த உரிமம் பெறப்பட வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளின் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாத்து பராமரிக்கும் பொருட்டு திறந்தவெளியில் மலஜலம் கழித்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மலக்கசடு கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளாட்சிகளின் உரிமம் பெற்ற மலக்கசடு கழிவுநீர் வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் முறையை ஒழுங்குபடுத்த, முறைப்படுத்த கடந்த 2022ம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இந்நகராட்சி மூலம் TN04U1485 கழிவுநீர் வாகனம் பதிவு பெற்று உரிய உரிமத்துடன் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் தாங்கள் வீடுகளில் உருவாகும் மலக்கழிவுகளை முறையாக மலக்கழிவு குழியில் விட்டு தேவைக்கேற்ப நகராட்சி உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் அகற்றப்பட வேண்டும்.
அவ்வாறு அகற்றப்படும் நிலை ஏற்படும் போது 14420 அல்லது 1800 4257 925 என்ற இலவச அழைப்பு எண்ணில் தொடர்பு கொண்டு அகற்றிடவும், இதனால் கொட்டும் இடத்திற்கான பில் வழங்க தேவை இராது. அவ்வாறு அகற்றும் லாரி வாடகை கூலியாக ரூ.2000 மட்டும் நகரமன்ற தீர்மானம் எண்:156, நாள்:23.9.2024 வழங்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லாரி வாடகை மற்றும் கூலி வழங்கிடவும், நகராட்சி மூலம் நிர்ணயிக்கப்பட்ட (தாம்பரம் மாநகராட்சி) மலக்கழிவு கசடு அகற்றும் நிலையத்தில் (எஸ்டிபி) கொண்டு சேர்க்க வேண்டும்.
மீறி, திறந்தவெளிகள், நீர்நிலைகள், பொதுகால்வாய்களில் விடுவது கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் 6 மாதம் முதல் 2 வருட சிறைத்தண்டனை வழங்கிட சட்டத்தில் வழிவகையிருப்பதால் அதன்படி தண்டிக்கப்படுவீர்கள். இந்நகராட்சி உரிமமில்லாத, பதிவில்லாத கழிவுநீர் அகற்றும் லாரிகளை நியமித்து மலக்கழிவு கசடுகள் அகற்றுவது மனிதனை மலக்கழிவு குழியில் இறக்கி சுத்தப்படுத்துவது தெரியவந்தால் சட்டவிதிகளின்படி (மனித கழிவுகளை மனிதனே அகற்ற தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013) ரூ.5000 முதல் ரூ.25000 அபராதமும் 6 மாத கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
The post சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றினால் சிறை: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.