சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் கல்வராயன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் (தெற்கு) நிலையத்தை வந்தடைந்தது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு, தமிழ் நாடு அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.
வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் TU-01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் (S-1331) வழித்தடம் 3-ல் (up line) அயனாவரம் மெட்ரோ இரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 867 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு நேற்று (13.05.2025) பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.
அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும், இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் S 1331 பெரம்பூர் ரெயில்வே நிலையத்தின் பாதைகள் / நிலையங்களை மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.
இந்நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
The post சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்து பெரம்பூர் நிலையம் வந்தடைந்த கல்வராயன்! appeared first on Dinakaran.