
பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், அவர்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டவும் தமிழக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கிராமப்புற பெண்களும், அதிகம் படிக்காத பெண்களும் சுயதொழில் செய்து வருவாய் ஈட்ட செய்யும் வகையில், அவர்களுக்காக சுய உதவி குழுக்கள் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் சிறு, சிறு தொழில்களை தொடங்க அரசின் சார்பில் பல உதவிகள் அளிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், வங்கிகளில் கடன் பெறவும், அந்த கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்கவும் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது. மேலும் அந்த சுய உதவி குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆங்காங்கே கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. இதோடு அவர்கள் தயாரிக்கும் பொருள் 'மதி' என்ற இணையதளம் மூலம் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு உதவியுடன் இப்போது கிராமப்புறங்களில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 39 சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில் 37 லட்சத்து 76 ஆயிரத்து 575 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோல நகர்ப்புறங்களில் உள்ள ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 862 சுய உதவி குழுக்களில், 18 லட்சத்து 51 ஆயிரத்து 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சுய உதவி குழு பெண்களெல்லாம் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த பெண்கள் விடியல் பயண திட்டம் மூலம் கட்டணமில்லா பயணத்தை டவுன் பஸ்களில் மேற்கொள்ள சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் டவுன் பஸ்களில் 25 கிலோ வரை கொண்டுசெல்ல ரூ.16 வரையும், புறநகர் பஸ்களில் ரூ.45 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தது. இப்போது அவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதன்மூலம் பெண்கள் இலவசமாக 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்களில் பொருட்களை எடுத்து செல்லலாம். இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சென்னையில் நடந்த விழாவில் ஆயிரம் மகளிர் சுய உதவி குழு சகோதரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அடையாள அட்டையை வழங்கியுள்ளார்.
மீதம் உள்ள பெண்களுக்கும், அடுத்த சில மாதங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கவேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி மிக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு இலவசமாக 'லக்கேஜ்' எடுத்து செல்ல அனுமதி மட்டுமல்லாமல் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன்களை பெறலாம், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் பொருட்களில் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி, ஆவின் பொருட்களுக்கு குறைந்த விலை, இ-சேவை மையங்களில் 10 சதவீத சேவை கட்டணம் குறைவு ஆகிய மேலும் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆக சுய உதவி குழு பெண்களுக்கு இனி செலவுகள் குறைந்து வருவாய் பெருகும். அவர்கள் வாழ்வாதாரமும் செழிக்கும். புதிய மலர்ச்சி ஏற்படும்.