
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரோகித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் சுப்மன் கில் - கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஷாகீன் அப்ரிடியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விரட்டி அவரை மிரள வைத்த கில் 46 ரன்களில் (52 பந்து, 7 பவுண்டரி) அப்ரார் அகமதுவின் சுழலில் போல்டானார்.
சுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியதை அப்ரார் அகமது ஆக்ரோஷமாக கொண்டடினார். சுப்மன் கில்லை பார்த்து வெளியே போ.. வெளியே போ.. என்ற வகையில் பெவிலியன் நோக்கி தலையசைத்து கொண்டாடினார். இதனால் சுப்மன் கில் கோபத்துடன் பெவிலியின் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இருப்பினும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாட இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.