இறைவனுக்கு சுந்தரன் என்று பெயர். மதுரை கள்ளழகருக்கு சுந்தர்ராஜன் என்று திருநாமம். திருநாகையில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு சௌந்தர்ராஜன் என்று திருநாமம். தேவார மூவரில் ஒருவருக்கு சுந்தரர் என்று பெயர். ராமாயணத்தில் அனுமனுக்கு சுந்தரன் என்று திருநாமம் அவருடைய பெயரில்தான் ஒரு காண்டமே இருக்கிறது அனுமனின் பெருமையைச் சொல்லும் அந்த காண்டத்திற்கு சுந்தரகாண்டம் என்று பெயர்.
?ததாஸ்து என்றால் என்ன?
– அனந்தநாராயணன், சிதம்பரம்.
ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள். நம் வீட்டினில் எப்போதும் ஒரு தேவதை நம்மைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கும். நாம் எதைச் சொன்னாலும் ‘ததாஸ்து’ என்று பிரதிவசனம் சொல்வதே அந்த தேவதையின் பணி. அதாவது அப்படியே ஆகட்டும் என்று ஆமோதிப்பதே அந்த தேவதைக்கு விதிக்கப்பட்ட வேலை என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால்தான் நாம் எதைப் பேசினாலும் மங்களகரமானதாக இருக்க வேண்டும், நாம் சொல்வது நல்வாக்காக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். உதாரணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒரு பொருளை நம்மிடம் கடனாகக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு கேட்கும்போது ‘என்னிடம் சுத்தமாக இல்லை’ என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொல்லும்போது அப்படியே ஆகட்டும் என்று அந்த தேவதை ஆசிர்வதிப்பதால் அவ்வாறே நடந்துவிடும். நமக்குத் தருவதற்கு விருப்பம் இல்லையென்றாலும் அல்லது உண்மையிலேயே இல்லை என்றாலும் இப்படிச் சொல்லிப்பாருங்கள் “எங்களிடம் நிறைய இருந்தது.. தற்போது திரும்பவும் வாங்கி வரவேண்டும்” என்று சொல்ல வேண்டும். பணமாகக் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், “உங்களுக்கு தரும் அளவிற்கு என்னிடம் பணம் மிகுதியாக வந்து சேர வேண்டும்” என்று சொல்லிப் பாருங்கள். நம் வீட்டினில் குறைவில்லாத செல்வம் வந்து சேரும். அதனை விடுத்து இல்லை என்று சொல்வதால் இருப்பதும் இல்லாமல் போய்விடும். எப்போதும் மங்களகரமான வார்த்தைகளேயே பேசவேண்டும். அவ்வாறான வார்த்தைகளால் உண்டாகும் அதிர்வலைகள் நம் குடும்பத்தை சந்தோஷமாய் வைத்திருக்கும்.
?கெட்ட கனவுகள் வராமலிருக்க சொல்ல வேண்டிய இறை மந்திரம் என்ன?
– அயன்புரம்.சத்திய நாராயணன்.
ஆஞ்சநேயரைத் தியானம் செய்து, ‘அஞ்சிலே / புத்திர் பலம் அச்யுதம்’ எனும் சுலோகங்களில் ஒன்றைச் சொல்லிவிட்டுப்படுத்தால், கெட்ட கனவுகள் வராது. அப்பாடல்கள்:
“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்’’
“புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்’’
“அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்ஸம்
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே’’
?வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்கிறார்கள். எது முக்கியம்?
– நித்யா, திருநெல்வேலி.
வாஸ்து சாஸ்திரத்தை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி எதையும் செய்ய முடியாது. ஆனால் சின்ன சின்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும். உதாரணமாகஈசானியம் எனப்படும் வடகிழக்குப் பகுதியை அடைத்து விடக்கூடாது. அந்த இடம் காற்று வரும் படியாக திறந்த இடமாக இருப்பதாக நல்லது. முடிந்தால் மற்ற இடங்களைவிட ஓரளவுக்கு ஒரு அங்குலமாவது தாழ் நிலையில் இருப்பது நல்லது. அக்னி மூலையிலும் ஈசானிய மூலையிலும் கழிவறைகளை அமைத்துக்கொள்ளக்கூடாது. இப்படி ஒரு சில விஷயங்களை அனுசரித்தால் போதும்.
?கடந்த காலங்களில் செய்த தவறை எண்ணி வருந்துவது நல்லதா?
– சிவசங்கர், சிவகங்கை.
இதில் என்ன சந்தேகம்? செய்த தவறு எண்ணி வருந்தத் தான் வேண்டும். அதைவிட முக்கியம் தவறில் இருந்து திருந்த வேண்டும். ஆனால், சிலர் பழைய தவறுகளை எண்ணி எண்ணியே நொந்து போகிறார்கள் அவர்கள் புதிதாக வாழ்வதும் இல்லை. செயல்படுவதும் இல்லை. நடந்து போன பழையவைகளைப் பற்றியே வேறு வேலை செய்யாமல் திரும்பத் திரும்ப வருந்துவதில் என்ன பயன்? செய்துவிட்ட தவறை அது சரி செய்து விடுமா, என்ன? ஆகையினால் தவறை நினைத்து வருந்துவதோடு திருந்தவும் பார்க்க வேண்டும். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் அதே தவறுகள் நடக்காமல் இருக்க உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுதான் நடை முறையில் செய்யக்கூடியது. மேற்கொண்டு தவறு செய்யாமல் இருக்கும் விழிப்புணர்வைத் தருவது.
?வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்று சொல்கிறார்கள் ஆனால் பலர் அதனை பலவீனமாகத் தானே கருதுகின்றார்கள்?
– கயிலாசம், திருச்சி.
எது பலவீனம் எது பலம்? என்று பலருக்கும் புரிவதில்லை. நிமிர்ந்து நிற்பது தான் பலம் என்று நினைத்து நொடிந்து விடுகின்றார்கள். வளைந்து கொடுப்பது தான் பலம். எதற்குமே சாய்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் வேலைவிட வளைந்த வில் அம்பு தான் அதிக தூரம் பாயும் எனவே சில நேரங்களில் வளைந்து நெகிழ்ந்து சில காரியங்களை நாம் சாதிக்க வேண்டி இருக்கும்.
?நாகதோஷ நிவர்த்திக்கு எங்கு செல்லவேண்டும்?
– கே.முருகன், பழனி.
தோஷம் என்பதும் யோகம் என்பதும் அவரவர்கள் புரிந்துகொள்ளும் தன்மையைப் பொறுத்தது. ஜாதகத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்தால் இறைவனை முழுமையாக நம்பி வழிபாடு செய்யுங்கள். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு கடமையைச் செய்யுங்கள். தர்மம் தவறாது நடந்து வந்தாலே தானாக ஜாதகத்தில் உள்ள குறை என்பது நீங்கி நிறை என்பது உண்டாகும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை உண்டாவதற்காக அருகில் உள்ள அரசமரத்தடி நாகரை அதிகாலைப்பொழுதில் வலம் வந்து வணங்குங்கள். நாகதோஷம் என்பதும் யோகத்தைத் தரும் வகையில் மாறிவிடும்.
அருள்ஜோதி
The post சுந்தரன் என்று யாருக்குப் பெயர்? appeared first on Dinakaran.