
ஜியாமென்,
19-வது சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஜியாமென் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'டி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவை சந்தித்தது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா இணை 10-21, 21-8, 21-19 என்ற செட் கணக்கில் ரீஹன் நபால் குஜர்ஜன்டோ-குளோரியா இமானுல் விட்ஜலா ஜோடியை தோற்கடித்தது.
அடுத்து நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பெண்கள் இரட்டையரில் பிரியா-ஸ்ருதி மிஸ்ரா இணையும், ஆண்கள் இரட்டையரில் ஹரிகரண் அம்சகருணன்-ரூபன்குமார் ரத்தின சபாபதி கூட்டணியும் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டனர். முதலாவது ஆட்டத்தில் 1-4 என்ற கணக்கில் டென்மார்க்கிடம் பணிந்த இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணி காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.