25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.
கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும். அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-
வேலூர் - 104.9 டிகிரி பாரான்ஹீட்
கரூர் - 104 டிகிரி பாரான்ஹீட்
ஈரோடு - 103.28 டிகிரி பாரான்ஹீட்
சேலம் - 102.2 டிகிரி பாரான்ஹீட்
தருமபுரி - 100.76 டிகிரி பாரான்ஹீட்
மதுரை - 100.4 டிகிரி பாரான்ஹீட்