
பாகிஸ்தானின் ஓர் அங்கமாக இருந்த வங்காளதேசம் (கிழக்கு பாகிஸ்தான்) 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் வென்று தனி நாடாக மாறியது. அதற்கு பிறகு, பாகிஸ்தானுடன் வர்த்தக உறவுகள் எதையும் வங்காளதேசம் வைத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து சூழல் மாறத்தொடங்க்யுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு பிறகு பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு இடையிலான உறவு மேம்பட்டுள்ளது. அதன்படி தற்போது முதல் முறையாக "பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதி பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தையின்போது, பாகிஸ்தானிடமிருந்து சுமார் 50,000 டன் அரிசியை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் வங்காள தேசம் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் முறையாக அரசின் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்தின் கப்பல் ஒன்று வங்காளதேசம் துறைமுகத்தை அடையவுள்ளதாகவும், இது கடல்சார் வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பாகிஸ்தானிலிருந்து 50,000 டன் அரிசியானது இரண்டு கட்டமாக வங்காளதேசத்திற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், 2 ஆம் கட்ட இறக்குமதி சுமார் 25,000 டன் அரிசியுடன் அடுத்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.