சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு - அரசுத்தரப்பில் முறையீடு

5 hours ago 1

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், 'சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "போக்குவரத்து கழகங்கள் நிலுவைத்தொகையை செலுத்தாமல் பிரச்சினையை இழுத்துக்கொண்டே சென்றால் நிலுவைத்தொகை ரூ.300 கோடி, ரூ.400 கோடி என உயர்ந்துவிடும்.

அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டு விரைந்து செயல்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. சுங்கச்சாவடிகளில் அரசு பஸ் போக்குவரத்தை நிறுத்தி தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், நிலுவைத்தொகையை வசூலிக்க முடியாத நிலை உள்ளதாக சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

எனவே, கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக 10-ந்தேதி (நாளை) முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை இயக்க அனுமதிக்கக்கூடாது. இந்த சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் பாக்கியால் அரசு பஸ்களுக்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

Read Entire Article