சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மேலும் விலை உயர்வுக்கு வழி கோலும். இந்தியா போன்ற விவசாய நாட்டில் விவசாயம் பொய்த்து வரும் நிலையில் பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரே தொழிலாக கட்டுமான தொழில் விளங்கி வருகிறது. ஏற்கனவே சிமென்ட், செங்கல், மணல், ஜல்லி போன்றவற்றின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு கடுமையாக உள்ளதால், இந்த தொழில் முடங்கும் அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சுங்கக் கட்டண உயர்வு இந்த பொருட்களின் விலை ஏற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்று விடும். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க கூடிய அபாயம் ஏற்படும். சாமானிய மக்கள் முதல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய காய்கறிகள், மளிகைப் பொருட்களின் விலையும் சுங்கக் கட்டண உயர்வால் உயரும். எனவே, ஒன்றிய மோடி அரசு உடனடியாக கட்டண உயர்வை நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சுங்க கட்டண உயர்வு; கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு வழிவகுக்கும்: ஒன்றிய அரசுக்கு பொன்குமார் கண்டனம் appeared first on Dinakaran.