
பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்திருப்பதாகவும், 30-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
உறையூர் பகுதியில் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பல நாட்களாக கழிவுநீர் கலந்து வருவதாக வார்டு கவுன்சிலர் தொடங்கி மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மூன்று பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூன்று பேர் உயிரிழந்ததற்கு பின்னர் உறையூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை அவசர அவசரமாக பரிசோதனைக்குட்படுத்தும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலந்த குடிநீர் தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மூவர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் உறையூர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசும் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ?
எனவே, மூன்று பேர் உயிரிழப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.