சேலம், மே 24: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பல இடங்களில் சுற்றுச்சுவர் சேதமானதால், அவற்றை சீர் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சேலம் மாநகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் இருந்து நீர் எடுத்து தான் சிவன், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். தெப்பக்குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்து வருகிறது. கடந்த சில மாதமாக தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து வருகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தினர்.இதையடுத்து தெப்பக்குளம் சீரமைக்கும் பணியில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கடந்த இரு நாட்களாக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சு வெளியேற்றினர்.
சுமார் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தெப்பக்குளம் சுற்றுச்சுவரை சீரமைப்பதற்காக சாரம் கட்டி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெப்பகுளத்தில் சுற்றுச்சுவர் பல இடங்களில் சரிந்தும், சேதமடைந்து உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றி சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணி ஒரு மாதத்தில் நிறைவு ெசய்து மீண்டும் புது தண்ணீர் விடப்படும்,’’ என்றனர்.
The post சுகவனேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு appeared first on Dinakaran.