சென்னை: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3, ஆதித்யா எல்-1 ஆகிய விண்வெளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதுபோன்ற பெரிய திட்டங்களை ஒரு பக்கம் செயல்படுத்தினாலும் ராணுவ பாதுகாப்பு, வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செய்ற்கைகோள்களை ஏவி வருகிறது. அந்த வகையில் நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1பி ரேடார் இமேஜிங் செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் உலக நாடுகள் கேட்டு கொண்டதுக்கு இணங்க தாக்குதலை நிறுத்தி கொள்வதாக இருநாடுகளும் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் இஸ்ரோ எல்லை கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட் 1பி-ஐ செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணியான 22 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டில் சுமார் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். அத்துடன், அனைத்து வானிலை தரவுகளை விண்வெளியில் இருந்து உடனுக்குடன் அனுப்பும் திறன்களை இந்த செயற்கைகோள் கொண்டுள்ளது. மேலும் ராணுவ பாதுகாப்புக்கு தேவையான கண்காணிப்பு பணிகளை இதன் வாயிலாக மேற்கொள்ளலாம். அதனுடன் பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் வன பாதுகாப்புக்கும் இந்த நுட்பம் பயன்படும். ஏற்கெனவே அனுப்பப்பட்ட ரிசாட் 1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுவதாக இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post நாளை விண்ணில் பாய்கிறது: பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது appeared first on Dinakaran.