சீர்காழி நகராட்சி பகுதியில் காலிமனைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

2 months ago 12

சீர்காழி, டிச.19: சீர்காழி நகராட்சி பகுதிகளில் காலி மனைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்று நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் காலி மனைகள் காணப்படுகின்றன. இந்த மனைகள் பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலி மனையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருக்கும் பாலித்தீன் பைகள், டயர்கள் தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொசுக்கடியால் மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்கள் வரும்போது காலி மனைகளில் மழைநீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் காலி மனைகளில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சீர்காழி நகராட்சி பகுதியில் காலிமனைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article