*தொற்றுநோய் பரவும் அபாயம்
*அப்புறப்படுத்த கோரிக்கை
சீர்காழி : சீர்காழி அருகே திருவெண்காடு- மங்கைமடம் இடையே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவு மற்றும் இறைச்சிக் கழிவுகளால் குவிந்து கிடப்பதால் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு – மங்கைமடம் இடையே அமைந்துள்ள மணிகர்ணகையாற்றின் கரையோரமும், பிரதான சாலையோரமும் இருந்த குளத்தை ஆக்கிரமித்து குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கடைகளிலிருந்து இறைச்சி கழிவுகளையும் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு வந்து வீசி செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் காற்றின் காரணமாகவும் குப்பைகள் சரிந்து ஆற்றில் குப்பைகள் அடித்து செல்வதால் நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் புகை மூட்டத்தாலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
குப்பைகளையும் இறைச்சி கழிவு துர்நாற்றத்தையும் கடந்தே திருவெண்காட்டில் உள்ள நவகிரக கோயிலுக்கும், பூம்புகார் சுற்றுலா தளத்திற்கும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல முறை சாலையோரம் குப்பைகள் கொட்டக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குப்பைகள் கொட்டக்கூடாது என போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஆனால் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்படவில்லை. அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக இடம் தேர்வு செய்து குப்பைகளை கொட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோரம் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீர்காழி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் appeared first on Dinakaran.