சென்னை: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில், இரு காவலாளிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி வளசரவாக்கம் காவல் துறையினரால் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாகவும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் ராணுவ வீரரும் சீமான் வீட்டின் பாதுகாவலருமான அமல்ராஜ் மற்றும் காவலாளி சுபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், அமல்ராஜிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அமல்ராஜ் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், கடந்த பிப்ரவரி 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவருக்கும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்த நிலையில் இருவருக்கும் நேற்று ஜாமீன் வழங்க மறுத்தும், மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
The post சீமான் வீட்டில் சம்மனை கிழித்த விவகாரம் இரண்டு காவலாளிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.