சீமான் வீட்டில் கைதானவர்கள் விவகாரம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு

3 hours ago 3

சென்னை: சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விஜயகுமார் என்ற வழக்கறிஞர் ஆஜராகி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் கொடுக்க சென்ற இடத்தில் காவல்துறை அத்துமீறியுள்ளது.

இரண்டு பேரை போலீசார் அழைத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்துள்ளனர். இதுகுறித்த ஆட்கொணர்வு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதற்கு நீதிபதிகள் போலீசார் கைது செய்தால் 24 மணி நேரம் அவர்களுக்கு அவகாசம் உள்ளது. 24 மணி நேரத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். அதையெல்லாம் நீங்கள் சரிபார்த்த பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறி அவசரமாக வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

The post சீமான் வீட்டில் கைதானவர்கள் விவகாரம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article