சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சீமான் மீது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து தந்தை பெரியார் பற்றிய சீமான் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் சீமான் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரட்டுள்ளார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார்.