
சென்னை,
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை கடந்த 17-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். அதுகுறித்து அவர் பிறப்பித்த தீர்ப்பின் முழுவிவரம் தற்போது வெளியாகியுள்ளது, அதில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:
*சீமான் இயக்கிய திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்துள்ளார். இதனால், சினிமா துறையில் ஏற்பட்ட பிரச்சினை, தன் சகோதரி வீடு தொடர்பான பிரச்சினை ஆகியவைகளுக்காக உதவி கேட்டு சீமானை விஜயலட்சுமி அணுகியுள்ளார்.அப்போது அவரை திருமணம் செய்துக் கொள்வதாக உத்தரவாதம் அளித்து, விஜயலட்சுமியுடன் சீமான் உறவு கொண்டுள்ளார்.தன்னை திருமணம் செய்து கொள்ளுபடி விஜயலட்சுமி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்கும்போது, சீமானுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே காதல் எதுவும் கிடையாது.
6 அல்லது 7 முறை விஜயலட்சுமி கர்ப்பத்தை கலைத்துள்ளார். அதுமட்டுமல்ல விஜயலட்சுமியிடம் இருந்து சீமான் பெருந்தொகை பணமும் பெற்றுள்ளார். இதன் பின்னர் திருமணம் செய்துக் கொள்ளாததால், சீமான் மீது விஜயலட்சுமி புகார் செய்துள்ளா்.பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது; அதை தன்னிச்சையாக திரும்பப்பெற முடியாது. மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.