
திருப்பதி:
திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் இரவில் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான நேற்று காலையில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவில் அன்ன வாகனத்திலும் சுவாமி எழுந்தருளினார்.
முன்றாம் நாளான இன்று காலையில் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில், யோக நரசிம்மராக எழுந்தருளிய பகவான், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தன. கற்பூர ஆரத்தி காட்டியும் வழிபட்டனர்.
வாகன சேவைக்கு முன்னால் செண்டை மேளம் முழங்க, கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூன்றாம் நாள் விழாவில் சிம்ம வாகனம் ஒழுக்கத்தையும் அறத்தையும் குறிக்கிறது. வீரம், தைரியம், புத்திசாலித்தனம், ஆதிக்கம் மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக சிங்கம் உள்ளது. நரசிம்மராக பகவானை தரிசனம் செய்வதன் மூலம், இந்த சக்திகள் அனைத்தும் உணர்வு பெற்று வாழ்வில் வெற்றிகளை தரும் என்பது ஐதீகம்.