சீனாவுக்கு சவாலாக... உலகளாவிய தெற்கு பகுதிக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி

4 hours ago 1

போர்ட் லூயிஸ்,

மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, தீவு நாடான மொரீசியசுக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின்னர், பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் புகழ்ந்து பேசினார். அவர் பேசும்போது, மொரீசியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஆழ்ந்து வேரூன்றிய கலாசார உறவுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் மீண்டும் வலியுறுத்தி கூறினார். நீங்கள் எப்போதெல்லாம் எங்களுடைய நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள் என பிரதமர் மோடியை பாராட்டி பேசினார்.

மொரீசியஸில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

இந்த நிலையில், மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் இன்று உறுதி செய்யப்பட்டன.

உலகளாவிய தெற்கு பகுதியில், தன்னுடைய செல்வாக்கை விரிவாக்கம் செய்யும் தடையற்ற முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. இது அதனை சுற்றியுள்ள பிற சிறிய நாடுகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. தைவானை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்குடன் சீனாவின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் வலம் வரும் சூழலில், அதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியிலும் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற சில அண்டை நாடுகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

இந்த சூழலில், உலகளாவிய தெற்கு பகுதிக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான பெரிய தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி மொரீசியஸில் இருந்து இன்று வெளியிட்டார்.

அப்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவால், சாகர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது பற்றியும் அவர் நினைவுகூர்ந்து பேசினார். இந்த மண்டலத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான திட்டம் என்பதே சாகர் திட்டத்தின் விரிவாக்கம் ஆகும்.

இந்த சூழலில், புதிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்தியாவின் உலகளாவிய தெற்கு பகுதிக்கான புதிய பார்வையான மகாசாகர் திட்டமே அந்த புதிய திட்டம் ஆகும்.

இதன்படி, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பரம் மற்றும் முழுமையான நவீனத்துவம் (மகாசாகர்) வாய்ந்த ஒன்றாக நம்முடைய உலகளாவிய தெற்கு பகுதிக்கான தொலைநோக்கு பார்வை இருக்கும் என்று அப்போது அவர் கூறினார்.

இதேபோன்று நம்முடைய தொலைநோக்கு பார்வையானது, வளர்ச்சிக்கான வர்த்தகம், நீடித்த வளர்ச்சிக்கான திறன் கட்டமைப்பு மற்றும் பகிரப்பட்ட வருங்காலத்திற்கான பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என அவர் கூறியுள்ளார். உலகளாவிய தெற்கு பகுதியில் தனி ஆதிக்கம் செலுத்த சீனா முயன்று வரும் சூழலில், அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய வளர்ச்சியை கவனத்தில் கொண்டு இந்த மகாசாகர் திட்டம் அமைந்துள்ளது.

உலகளாவிய தெற்கு, இந்திய பெருங்கடல் அல்லது ஆப்பிரிக்க கண்டம் என எதுவாக இருப்பினும், மொரீசியஸ் நம்முடைய நட்பு நாடாகும் என்று மோடி, பெருமிதத்துடன் மொரீசியஸை குறிப்பிட்டு கூறினார்.

Read Entire Article