சீனா: மணமகளை அலங்கரித்து கம்பத்தில் கட்டி வைக்கும் வினோத சடங்கு; குவியும் கண்டனம்

3 months ago 19

பீஜிங்,

சீனாவில் வடக்கே அமைந்த ஷாங்கி மாகாணத்தில் சில பகுதிகளில் திருமணத்தின்போது வினோத சடங்குகள் நடந்து வருகின்றன. இதன்படி, மணமகளை அதற்கான ஆடைகள், ஆபரணங்களை அணிவித்து, அலங்காரம் செய்து அழைத்து வருகின்றனர். இதன்பின்னர், மணமகனின் நண்பர்கள் குண்டுகட்டாக மணமகளை தூக்கி வந்து தொலைபேசி கம்பம் ஒன்றில் கட்டி வைக்கின்றனர்.

அப்போது, அந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறுகிறார். உதவி கேட்டு, தப்பியோட முயற்சிக்கிறார். ஆனால், ஒருவரும் இதனை தடுக்க முன்வரவில்லை. சுற்றியிருந்த பலரும் சிரித்து கொண்டே கட்டாயப்படுத்தி, டேப் உதவியால் கை, கால்களை கம்பத்துடன் சேர்த்து கட்டி போட்டு விடுகின்றனர். நூற்றாண்டு பழமையான இந்த பாரம்படிய திருமண சடங்கு பற்றிய வீடியோ வைரலானதும் இணையதளவாசிகள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வினோத சடங்கு பற்றி மணமகனின் நண்பரான யாங் என்பவர் கூறும்போது, நாங்கள் அனைவரும் சிறுவயதில் இருந்து மணமகனின் நண்பர்களாக பழகி வருகிறோம். இந்த விளையாட்டை விளையாட அந்த ஜோடி முன்பே ஒப்பு கொண்டு விட்டது. இது எங்கள் உள்ளூர் பழக்கம். நாங்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு வேறு எந்த தீங்கு தரும் விசயமும் நாங்கள் செய்யவில்லை என கூறியுள்ளார்.

 

கம்பத்தில் மணமகளை கட்டி வைக்கும்போது, மணமகனும் உடன் இருந்ததுடன், மணமகளின் பாதுகாப்பை நாங்கள் அனைவரும் கவனித்து கொண்டோம். இந்த சூழலை தவறாக புரிந்து கொள்ள கூடாது என சுற்றியிருந்தவர்களிடம் வலியுறுத்தினோம் என்றார். எனினும், சமூக வலைதளத்தில் இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.

அடுத்தவரின் துயரத்தில் உங்களுடைய மகிழ்ச்சியை கட்டியெழுப்புவது என்பது உண்மையில் வேதனையளிக்கிறது என ஒருவர் தெரிவித்து உள்ளார். மற்றொருவர், மணமகளுக்கு ஏதேனும் நடந்து விட்டால், யார் அதற்கு பொறுப்பு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, யாங் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்கள் இதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டனர். இதுபோன்ற நடப்பில் இல்லாத, பழக்க வழக்கங்களை கைவிடும்படி மக்களை வலியுறுத்தும் முயற்சிகள் வலுப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கலந்து கொண்டு, சிரித்து மகிழ்ந்து, துர்சக்திகளை விரட்டுவதற்காக இதுபோன்ற நடைமுறையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், உகான் பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விருப்பமில்லாத திருமண ஏற்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, சில திருமணங்களில், மணமகனின் உடலில் வாழை பழங்களையோ அல்லது வெள்ளரிகளையோ கட்டி விடுவார்கள்.

அதனை மணமகளை விட்டு கடிக்க செய்வார்கள். வேறு சில திருமண நிகழ்வில், மணமகனை ஆடைகளை களைந்து விட்டு, மணமகளுடன் ஒன்றாக நிற்கும்படி செய்கின்றனர் என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். இதுபோன்ற ஆபாச திருமண சம்பவங்கள் சீனாவில் நடப்பது புதிதல்ல என்றும் அந்நாட்டில் இருந்து வெளிவரும் சவுத் மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.

2016-ம் ஆண்டு டிசம்பரில் இதுபோன்ற ஒரு சடங்கின்போது, தென்மேற்கு சீனாவில், மணமகனை கயிற்றால் கட்டி வைத்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு நிரந்தர செயலிழப்புக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்த பாதிப்புக்காக அவரை கட்டி வைத்தவர்களுக்கு ரூ.11.76 லட்சம் இழப்பீட்டு தொகையை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

Read Entire Article