
ஆமதாபாத்,
குஜராத் மாநில ஐகோர்ட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பல வழக்குகள் இன்னமும் ஆன்லைனில்தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணை, கோர்ட்டில் உள்ள யூடியூப் மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதற்கிடையே அடிதடி வழக்கு விசாரணை ஒன்று ஆன்லைன் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி நிர்சார் எஸ்.தேசாய் அதனை விசாரித்தார்.
இதில் மனுதாரர் கழிவறையில் இருந்தபடியே தனது செல்போன் மூலம் ஆன்லைனில் விசாரணைக்காக காத்திருந்தார். மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்திருந்த அவரது பெயர் சமத் பேட்டரி என்று திரையில் தெரிந்தது.
சிறிதுநேரம் அவர் தனது செல்போனை கீழே வைத்தார். அப்போது அவர் கழிவறையில் இருந்ததும், அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைனில் ஒளிபரப்பானது.
இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் கழிவறையில் தனது வேலையை முடித்துவிட்டு செல்போனை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர் அவர் வேறு ஒரு அறையில் அமர்ந்தவாறு விசாரணையில் பங்கேற்றார். தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை குஜராத் ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.எஸ்.சுபிகியா, ஆர்.டி.வச்கானி தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றது.
அப்போது, கழிவறையில் இருந்தவாறு வழக்கு விசாரணைக்கு ஆஜரான சமத் பேட்டரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வைரல் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் இருந்து நிரந்தரமாக நீக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு 2 வாரங்கள் கழித்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.