
திருப்பூர்,
சென்னையில் இருந்து மங்களூருக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 3-ந்தேதி புறப்பட்டது. இந்த ரெயிலில் திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த 34 வயது பெண் மற்றும் அவரது கணவர் முறப்பூரில் இருந்து முன்பதிவு செய்யபடாத டிக்கெட் எடுத்துள்ளனர். அப்போது அவசரத்தில் குளிர்சாதன பெட்டியில் ஏறியுள்ளனர்.
இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக வேலூர் மாவட்டம் புளியமங்கலம் பகுதியை சேர்ந்த பாரதி(வயது 50) என்பவர் இருந்துள்ளார். அப்போது அவர், அவர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அவர்கள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்துவிட்டு, குளிர்சாதன பெட்டியில் ஏறியதால் அவர்களை தனியாக மற்றொரு பெட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும், கணவரை ஒரு பெட்டியில் இருக்க வைத்து விட்டு, அந்த பெண்ணை மற்றொரு பெட்டிக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அவர்கள் திருப்பூர் வந்து இறங்கவும் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் ரெயில்வே போலீசார் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் பாரதியை கைது செய்தனர்.